சிறுவாணி அணையில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க நடவடிக்கை முதல்-அமைச்சர் கடிதம்

கோவை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறுவாணி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2022-06-19 23:11 GMT

சென்னை,

கோவை நகரின் முதன்மையான நீர் ஆதாரமாக சிறுவாணி அணை இருந்து வருகிறது.

தற்போது கோவை மாநகராட்சி பகுதிக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் மொத்த தண்ணீரான 265 மில்லியன் லிட்டரில் 101.40 மில்லியன் லிட்டர் தண்ணீர் சிறுவாணி அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

ஒப்பந்தம்

சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) குடிநீர் வழங்கும் வகையில் தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவாணி அணையின் முழு கொள்ளளவு 878.50 மீட்டர் என்றபோதிலும் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகபட்சமாக 877 மீட்டர் கொள்ளளவு தண்ணீரையே அணையில் தேக்கி வைக்கிறது.

அணையில் 1.5 மீட்டர் குறைவாக தண்ணீர் தேக்கப்படுவதால் 0.12 டி.எம்.சி. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பலமுறை கோரிக்கை

இது மொத்த தண்ணீர் சேமிப்பில் 19 சதவீதம் ஆகும். இதனால் கோடைகாலத்தில் கோவை நகரின் தேவைக்கு தண்ணீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணை மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 1.30 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்றபோதிலும், கடந்த 6 ஆண்டுகளாக 0.484 டி.எம்.சி. முதல் 1.128 டி.எம்.சி. அளவிலான தண்ணீரையே சிறுவாணி அணையில் இருந்து தமிழகம் பெற்றுள்ளது.

அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க தமிழக அதிகாரிகள் குழு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. நானும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளேன். இருந்தபோதிலும் கேரள நீர்ப்பாசனத்துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.

முழு கொள்ளளவில் தண்ணீர்

கோவை நகர மக்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான 878.50 மீட்டர் வரை தண்ணீரை தேக்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நடவடிக்கை மட்டுமே கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்