முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் விமான நிலையத்தில் வரவேற்பு

Update: 2023-07-24 19:57 GMT

ஓமலூர்:-

தொப்பூர் விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் தொடக்க விழா தமிழ்நாட்டில் முதல் முறையாக தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடந்தது. விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.45 மணிக்கு வந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், கூடுதல் டி.ஜி.பி.அருண், மாவட்ட கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்) சாந்தி (தர்மபுரி), மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் கொடுத்து முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

வழிநெடுகிலும் வரவேற்பு

பின்னர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தொப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காடையாம்பட்டி ஒன்றிய தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது காரில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ரமேஷ், செல்வகுமரன், அறிவழகன், பாலசுப்பிரமணியம், ரவிச்சந்திரன், காடையாம்பட்டி நகர செயலாளர் பிரபாகரன், ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, ரமேஷ்பாபு, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்- அமைச்சர் வருகையையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா முடிந்து காலை 11.35 மணி அளவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சேலம் விமானம் நிலையம் வந்தார். அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்