மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன? என்று மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கம் செயல்விளக்கம் அளித்தது.

Update: 2022-09-03 20:13 GMT


மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன? என்று மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கம் செயல்விளக்கம் அளித்தது.

ஒரு நிமிடத்தில்112 பேருக்கு மாரடைப்பு

இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 112 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால் அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர்.மனிதர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும்போது மார்பை அழுத்தி உயிரை காப்பது எப்படி? என்பது பற்றிய முதலுதவி செயல்விளக்க பயிற்சி வகுப்பு அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கம் சார்பில் தஞ்சையில் நேற்று நடந்தது. இந்த பயிற்சியில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர்.

செயல்விளக்கம்

அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்க முன்னாள் தலைவரும், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணருமான ஐஸ்டீன் அருணாச்சலம், பொது மருத்துவரான கபிலன் தர்மராஜன் மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த மருத்துவ பயிற்சியாளர்கள் ஆகியோர் முதலுதவி செயல்விளக்கப் பயிற்சிகளை வழங்கினர். மனித உருவம் கொண்ட பொம்மைகளின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.அதாவது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியவரின் தோளை தட்டி உரத்த குரலில் நீ நன்றாக இருக்கிறாயா? என முதலில் கேட்க வேண்டும். அப்போது உணர்வு இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும். உணர்வு இல்லை என்றால் உதவிக்கு 108 எண்ணை தொடர்பு கொண்டு ஆம்புலன்சை அழைக்க வேண்டும். பின்னர் மார்பை அழுத்த ஆரம்பிக்க வேண்டும்.

பயிற்சி பெற்ற கலெக்டர்

மார்பின் மீது இரு கைகளையும் வைத்து 30 முறை அழுத்த வேண்டும். இப்படி 5 தடவை செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து மயங்கிய நிலையில் கிடந்தவர் வாந்தி எடுத்தாலோ அல்லது முனங்கினாலோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும். உணர்வு இல்லை என்றால் ஆம்புலன்ஸ் வரும் வரை மீண்டும் மார்பை அழுத்த வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மாணவ, மாணவிகளையும் செய்து காண்பிக்க வைத்தனர்.பயிற்சியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு பயிற்சி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தியதுடன் அவரும் முதலுதவி எப்படி செய்வது என? மருத்துவர்கள் மூலம் கற்றுக் கொண்டார்.

பாதிப்பு குறையும்

இது குறித்து அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் ஐஸ்டீன் அருணாச்சலம், கபிலன் தர்மராஜன் ஆகியோர் கூறும்போது, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன? என்பது குறித்து இந்தியாவில் 99 சதவீதம் பேருக்கு தெரியாமல் உள்ளது. 1 சதவீதம் பேருக்கு தான் தெரிகிறது. மாரடைப்பு ஏற்பட்டால் மார்பு பகுதியை தொடர்ந்து 30 வினாடிகள் அழுத்தினால் மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.அதற்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வு அமெரிக்காவில் 80 சதவீதம் பேருக்கு தெரியும். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று இந்த செயல்விளக்க பயிற்சியை அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அளித்து வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்