பட்டாசு ஆலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர், ராஜேந்திரராஜா (வயது 65). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்சேவல் கிராமத்தில் உள்ளது.நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40 அறைகள் உள்ளன. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மணிமருந்து காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.அங்கு கே.லட்சுமிபுரத்தை சேர்ந்த கணேசன் (40), ராஜா (38), ஆலங்குளம் அருகே உள்ள புல்லாய்பட்டி என்ற ஆ.லட்சுமியாபுரத்தை சேர்ந்த முத்தம்மாள் (35) ஆகியோர் வேலை செய்து கொண்டு இருந்தபோது, கலவையில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென ெவடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது.
வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதில் கணேசன், ராஜா ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், தீயணைப்பு மாவட்ட அலுவலர் விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் சங்கர், சாத்தூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் பட்டாசு ஆலையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிவிபத்து குறித்து கங்கர்சேவல் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கேயன், ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை போர்மேன் சக்கையா (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.