கப்பலூர் தீ விபத்தில் காயம் அடைந்த தீயணைப்பு வீரர்களை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து ஆறுதல் - நிவாரண தொகை வழங்கினார்

மதுரை கப்பலூர் தீ விபத்தில் காயம் அடைந்த தீயணைப்பு வீரர்களை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண தொகையை வழங்கினார்.;

Update: 2022-10-19 20:04 GMT

மதுரை கப்பலூர் தீ விபத்தில் காயம் அடைந்த தீயணைப்பு வீரர்களை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண தொகையை வழங்கினார்.

தீ விபத்தில் 4 பேர் காயம்

மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை திடீர் நகர், தல்லாகுளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறின. இதில் திடீர்நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாணகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

டி.ஜி.பி. ஆறுதல்

அவர்கள் சிகிச்சைகாக மதுரை எல்லீஸ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிறிய காயம் அடைந்த தீயணைப்பு வீரர் பாலமுருகன் தவிர மற்ற 3பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர்களை தமிழக தீயணைப்பத்துறை டி.ஜி.பி. ரவி நேற்று சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு தலா ஒரு லட்சமும், சிறிய காயம் அடைந்த வீரருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 3½ லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையாக டி.ஜி.பி. ரவி காயம் அடைந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கினார்.

ரூ.3½ லட்சம் நிவாரண தொகை

பின்னர் டி.ஜி.பி. ரவி கூறும்போது, தீ விபத்தில் காயம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு, தீயணைப்பு நிலையங்களுக்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அதிகாரி வினோத், உதவி மாவட்ட அதிகாரிகள் பாண்டி, செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்