மாநகராட்சி பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை

மாநகராட்சி பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடைபெற்றது.

Update: 2022-10-16 18:45 GMT


கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பீளமேட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மழைக்காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது பேரிடர் காலத்தில் ஒருவர் சிக்கிக்கொண்டால் அவரை காப்பாற்றி கையில் தூக்கிக்கொண்டு வருவது எப்படி?, தீயணைப்பான் கருவிகளை கையாளுவது எப்படி? என்பது குறித்து தத்ரூபமாக நடித்துக்காட்டினர்.

இதேபோல பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் அ.அறிவரசு தலைமை தாங்கினார். பெரியநாயக்கன்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் கண்ணகி, பேரிடர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன், பேரிடர் என்றால் என்ன, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும் தீயணைப்புத்துறையினால் விரைவில் நடைமுறைபடுத்தப்பட உள்ள புதிய செயலி குறித்தும் எடுத்துரைத்தார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்