பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில மாநாடு

சிவகாசியில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-08-14 18:42 GMT

சிவகாசி, 

சிவகாசியில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மாநில மாநாடு

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு சிவசாயில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ஏ.பி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். மாநாட்டினை மாணிக்கம் தாகூர் எம்.பி., சிவகாசி எம்.எல்.ஏ., அசோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் விவேகானந்தன், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் தலைவர் ஸ்ரீராம் அசோக், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி, தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் காத்தலிங்கம், சிவகாசி கம்பி மத்தாப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜி.எஸ்.டி. வரி

மாநாட்டில் பட்டாசு வணிகர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு மலரை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் வெளியிட மாணிக்கம் தாகூர் எம்.பி. பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாநாட்டில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசும் போது கூறியதாவது:- பட்டாசு மற்றும் தீப்பெட்டிக்கு தலைநகரம் சிவகாசி தான். இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்து இந்த தொழில் சிறப்பாக செயல்பட சிவகாசி தொழிலதிபர்களே காரணம். காங்கிரஸ் ஆட்சியின் போது இத்தொழில் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டாசு தொழில்

தொடர்ந்து பேசிய சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், இனிவரும் காலங்களில் பட்டாசு தொழில் மென்மேலும் வளரும் என்றார். மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டாசு வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்