நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது- கலெக்டர் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கலெக்டர் அமரித் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-23 21:59 GMT

நீலகிரி,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டி கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது:-

விநாயகர் சிலைகளின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று, சிலைகள் விசர்ஜனம் செய்யும் வரை, இரவும் பகலும் குறைந்த பட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். பொறுப்பாளர்கள் பெயர் மற்றும் கைபேசி எண்களை ஒரு அட்டையில் எழுதி தொங்க விடப்பட வேண்டும். அதன் நகல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அளிக்கப்பட வேண்டும். அந்த அட்டையில் சிலையை அமைக்கும் தேதி மற்றும் ஊர்வல தேதி குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட தேதியில் சிலையை கண்டிப்பாக அந்த இடத்தில் இருந்து எடுத்துவிட வேண்டும்.

திறந்த வெளியில் பாதுகாப்பின்றியும், எளிதில் தீப்பிடிக்க கூடிய பழுதான மின்சார ஒயர்கள் அருகாமையில் உள்ள இடத்தில் சிலைகளை வைக்கக் கூடாது. மேலும், விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் ஒலிபெருக்கி வைத்து யாரும் பேசக்கூடாது. சிலை ஊர்வலத்தின் போது, விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது பள்ளிவாசல்கள் அருகே வரும்போது அதிகமாக கோஷங்களை எழுப்புவது, டிரம்களை அடிப்பது பள்ளிவாசல் பகுதியை கடக்க தாமதம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

விநாயகர் சிலை விசர்ஜனத்திற்கு செல்லும் வழியிலோ விசர்ஜனம் செய்துவிட்டு வரும் வழியிலோ எந்தவிதமான சட்ட விரோத நடவடிக்கைகளிலோ, வேற்று மதத்தினரை இழிவுபடுத்தும் அல்லது மன அமைதியை கெடுக்கும் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. ஊர்வலத்தில் செல்லும் போது எந்த வகையான கோஷங்கள் எழுப்பப்படும் என்பதை முன்கூட்டியே காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், அனுமதியின்றி ஊர்வல பாதையில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது தட்டிகளை வைப்பது மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கக்கூடாது.

ஊர்வலத்தை காரணம் காட்டி கடைகள் மற்றும் இதர நிறுவனங்களை மூடச்சொல்லக் கூடாது. ஊர்வலத்தில் கலந்துக் கொள்பவர்கள் வாகனங்களிலோ அல்லது கைகளிலோ தடி மற்றும் எந்தவிதமாக ஆயுதங்களையும் எடுத்து வருதல் கூடாது. ஊர்வலத்தில் கண்டிப்பாக பட்டாசு வெடிக்கக் கூடாது. கலர் பொடிகளை தூவக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், குன்னூர் சப் -கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சரவணக்கண்னண், துரைசாமி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்