விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது
விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லும்போது பட்டாசு வெடிக்க கூடாது என்று வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.
விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லும்போது பட்டாசு வெடிக்க கூடாது என்று வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசியதாவது:-
விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. சிலைகள் வைக்கப்படும் பந்தல் அல்லது அந்த இடத்துக்கு தற்காலிக மின்இணைப்பு பெற வேண்டும்.
வீடு, கடைகளில் இருந்து மின்சார இணைப்பு எடுக்க கூடாது. விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்துக்கு காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறைகளிடம் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும்.
அனுமதி இன்றி விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய கூடாது. விநாயகர் சிலைகளுக்கு அந்தந்த பகுதிக்கு உட்பட்ட போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்களுடன் விழாக்குழுவினரும் இணைந்து செயல்பட வேண்டும்.
பட்டாசு வெடிக்க கூடாது
விநாயகர் சிலைகள் ஊர்வலம் போலீசார் அனுமதி அளிக்கும் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது. அதேபோன்று மதுஅருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது.
ஊர்வலத்தின்போது பிற வழிபாட்டு தலங்களின் அருகே நின்று தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க கூடாது. குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைத்து சிலைகளையும் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க விழாக்குழுவினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி உதவிகமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை விழாக்குழுவினர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாலைகளை சீரமைக்க கோரிக்கை
கூட்டத்துக்கு பின்னர் இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையிலான நிர்வாகிகள் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் வேலூர் மாநகராட்சி பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல் அருகே உள்ள பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சாலைகளை சீரமைத்து, வேகத்தடைகளை அகற்ற வேண்டும். சதுப்பேரி ஏரியில் நீர்நிலைகளை உருவாக்கி மின்சாரம் அமைத்து பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சதுப்பேரி ஏரிக்கு செல்லும் கரையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.