வேனில் இருந்து கடைக்கு எடுத்துச் சென்றபோது பட்டாசுகள் வெடித்து சிதறின; டிரைவர் கருகி பலி
வேனில் இருந்து கடைக்கு எடுத்துச் சென்றபோது, பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் டிரைவர் உடல் கருகி பலியானார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருணாச்சலம் நகரில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. திண்டுக்கல்லை அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் இந்த பட்டாசு கடையை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2.20 மணி அளவில் இந்த பட்டாசு கடைக்கு, சுக்காம்பட்டியில் இருந்து ஒரு வேனில் பட்டாசு பண்டல்கள் கொண்டுவரப்பட்டது. வேனை அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராஜேஷ்குமார் (வயது 40) ஓட்டி வந்தார். பட்டாசு கடை முன்பு வேனை நிறுத்திய அவர், வேனில் இருந்த பட்டாசு பண்டல்களை கடைக்குள் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.
தீயில் கருகி டிரைவர் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக வேனில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியது. இதில் பட்டாசுகள் வெடிக்கத்தொடங்கின. அப்போது வேனில் இருந்து தெறித்த தீப்பொறிகள் பட்டாசு கடைக்குள் விழுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பட்டாசுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.
அப்போது கடைக்குள் இருந்த 2 ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். இதற்கிடையே பட்டாசு பண்டல்களை தலையில் சுமந்தபடி வந்த ராஜேஷ்குமார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி பட்டாசு கடை முன்பு நின்றார். அப்போது அவர் வைத்திருந்த பட்டாசு பண்டல்களிலும் தீப்பொறி பட்டு அவை வெடித்து சிதறின.
இதனால் அவரால் அங்கிருந்து தப்பி ஓட முடியாமல் நிலை தடுமாறி வேன் அருகிலேயே விழுந்தார். அவர் தலையில் சுமந்தபடி வந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீப்பொறியால் அவர் உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் அவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.