கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள்

வாங்கிய கடனுக்காக அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-07-04 20:56 IST

ராமநாதபுரம், 

வாங்கிய கடனுக்காக அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடன்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் துப்புரவு பணியாளர் முனியாண்டி. இவர் தனது மனைவி ராணி, மகள் அருணாதேவி, மருமகள் நந்தினி, அபிதா உள்ளிட்டோருடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக ராமேசுவரம் ராஜாமணி என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.10 ஆயிரமாக கட்டுமாறு கூறினார்.

அதனை கட்ட வழியில்லாத நிலையில் எனது வீட்டுமனை பத்திரத்தினை பறித்து வைத்து கொண்டார். இதன்பின்னர் அந்த கடன் தொகையை செலுத்த சென்றபோது வாங்க மறுத்து பத்திரத்தை தர மறுத்துவருகிறார். எங்களை வீட்டில் இருந்து வெளியேற்றி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். தமிழக அரசால் தங்களுக்கு வழங்கப் பட்ட இலவச வீட்டுமனையை வாங்கிய கடனுக்காக அபகரித்து கொண்ட ராமேசுவரம் ராஜாமணி மற்றும் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனு

அவர்களிடம் இருந்து எங்களின் மனையை கைப்பற்றி நாங்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி தாங்கள் தயாராக கொண்டு வந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மண்எண்ணெய்யை பறித்து காப்பாற்றினர். மண்எண்ணெய்யை உடலில் ஊற்றியதால் அவர்களை அழைத்து சென்று காவலர்கள் தண்ணீர் ஊற்றினர். இதனை தொடர்ந்து அவர்கள் மனு அளித்து சென்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்