தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பூவரசன்குப்பத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அருகே உள்ள பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் பகுதியில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் மேலாண்மை மற்றும் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையின் உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் ஷாஜகான் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டு திட, திரவ எரிபொருள்களை கொண்டு தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது புயல், மழை வெள்ள காலங்களில் ஆபத்தில் சிக்கி உள்ளவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாக ஊழியர்கள், சமையல் பணியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.