திருத்தணி அருகே தீ விபத்து: 10 ஏக்கர் தோப்பு எரிந்து சேதம்
திருத்தணி அருகே 10 ஏக்கர் தைல மர தோப்பு எரிந்து சேதமடைந்தது.
திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையொட்டி மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் தைல தோப்பு உள்ளது. இதில் நேற்று மதியம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தோப்பின் உரிமையாளர் முனிரத்தினம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 ஏக்கர் தைலம் தோப்பு முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தைல மர தோப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.