புஞ்சைபுளியம்பட்டி அருகே தீ விபத்து: குடிசை எரிந்து நாசம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து நாசம் ஆனது.

Update: 2023-10-20 21:02 GMT

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பாறைபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 57). இவர் தனது மகன் சரவணன் மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் தகரத்தினாலான குடிசையில் வசித்து வருகிறார். நேற்று காலை பழனியம்மாள், அவருடைய மகன் சரவணன், மருமகள் ஆகியோர் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டனர். பேரக்குழந்தைகள் 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் பகல் 11 மணி அளவில் குடிசையில் இருந்து கரும்புகை வந்தது. இதைத்தொடர்ந்து குடிசை கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடிசையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம், 3 பவுன் நகை, பாத்திரங்கள், துணிகள் போன்றவை எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்