புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் மன்னர் கால அரண்மனை மற்றும் அலுவலக கட்டிடத்தை தவிர மீதிப்பகுதி மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்திற்கு பிரதான நுழைவு வாயில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறைச்சாலை ரவுண்டானாவில் இருந்து பால்பண்ணை ரவுண்டனா வரையில் செல்லும் சாலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மற்றொரு நுழைவு வாயிலும் இருந்து வருகிறது. இதில் ஒரு பகுதி பூட்டப்பட்டு கிடக்கிறது. இதன் உள் பகுதியில் நேற்று மதியம் காய்ந்த சருகுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்து குறித்து உடனடியாக அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.