தொழிலாளி வீட்டில் தீ
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் கூலித்தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் ஜலீல் முகமது (வயது 55). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது மனைவி ஜகிராபானுவுடன் வேலை விஷயமாக பழனி சென்று விட்டார். இந்நிலையில் அவரது வீட்டின் முன் பகுதியில் அமைத்திருந்த குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. எனவே பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விரைவாக அணைக்கப்பட்டதால் மற்ற பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.