திருவத்திபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

திருவத்திபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமாயின.

Update: 2023-05-06 16:00 GMT

திருவத்திபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமாயின.

குப்பை கிடங்கில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் நகராட்சி வளாகத்தில் பின்புறம் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்யாறில் தொடர் மழை பெய்த போது இடி-மின்னலுடன் பலத்த காற்று வீசியது. மின்னல் தாக்கிய போது, அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி குப்பை கிடங்கில் விழுந்தது. இதனால் அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

30 டன் எரிந்து நாசம்

தொடர்ந்து காற்று வீசவே குப்பையில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்ததும் நகரமன்ற தலைவர் மோகனவேல், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதும் எரிந்து நாசமாயின. இதில் 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குப்பை கிடங்கு அருகில் இருந்த நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள், பேட்டரி வண்டிகள் எரிந்து சேதமாகின.

Tags:    

மேலும் செய்திகள்