முள்ளிமலை பொத்தையில் தீ
கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் தீப்பிடித்து எரிந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள முள்ளிமலை பொத்தையில் கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், கோரைப்புற்கள் உள்ளிட்டவையும் அடர்ந்து வளர்ந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பொத்தையில் திடீரென தீ பிடித்தது. தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பனிப்பொழிவின் காரணமாகவும் விரைவாக தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீயில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள், கோரைப்புற்கள் எரிந்து நாசமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் இதுபோன்று தீப்பிடிப்பதால் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.