கணவர் குடும்பத்தினரை கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம்

தீக்காயம் அடைந்த பெண் இறந்ததால் கணவர் குடும்பத்தினரை கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கலெக்டரை சந்திக்க சென்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-14 19:59 GMT

தஞ்சாவூர்;

தீக்காயம் அடைந்த பெண் இறந்ததால் கணவர் குடும்பத்தினரை கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கலெக்டரை சந்திக்க சென்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீக்காயம் அடைந்த பெண் சாவு

தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே அகரப்பேட்டையை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் ராஜ்மோகன் (வயது26). இவரும், மயிலாடுதுறை மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த குணசேகரன் மகள் குணசீலாவும் (24) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.ராஜ்மோகன், குணசீலா ஆகியோர் திருமணத்திற்கு பிறகு மயிலாடுதுறையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்மோகன் தனது சொந்த ஊரான அகரப்பேட்டைக்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி இரவு குணசீலா தீக்காயம் அடைந்து விட்டதாக கூறி, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி குணசீலா கடந்த 12-ந் தேதி இரவு இறந்தார்.

உறவினர்கள் போராட்டம்

ஆனால் பெண்ணின் உறவினர்கள், குணசீலாவை அடித்து, துன்புறுத்தி வரதட்சணை வாங்கி வருமாறும், அவரை மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதால் தான் அவர் இறந்துவிட்டதாகவும், எனவே கணவர் குடும்பத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என கூறிவிட்டனர்.இந்தநிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு புதிய பாரத கட்சியின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதி. இல.அறிவுடைநம்பி தலைமையில் பெண்ணின் உறவினர்கள் நேற்றுகாலை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்குமார், ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். பின்னர் அவர்கள் திடீரென மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். ஆனால் போலீசார் அவர்களது வேனை நடுவழியில் மடக்கி, வேனில் இருந்த 30 பேரை கைது செய்து வல்லத்தில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்