பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-08-27 16:33 GMT

வீரபாண்டி,

திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவனம்

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி வரை வேலை நடைபெற்று கொண்டிருந்தது. 5 மணிக்கு மேல் பணிகள் முடிந்து அனைத்து தொழிலாளர்களும் சம்பளம் பெற்று வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பனியன் நிறுவனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

உடனேஅதை அணைக்க அங்கிருந்த சில ஊழியர்கள் முயற்சி செய்தனர். ஆனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பனியன் நிறுவனம் முழுவதும் தீ பரவதொடங்கியது. இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக பனியன் நிறுவனத்திலிருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது.

அதிக லாரிகளில் தண்ணீர்

இதனை தொடர்ந்து வீரபாண்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பனியன் நிறுவனம் 3ஆயிரம் அடிக்கும் மேற்பட்ட சதுர அடியிலுள்ளதால் 20 தண்ணீர் லாரிகளை வரவழைத்து சுற்றிலும் தீயை அணைக்க முயற்சித்தனர்.

அதன்படி சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் எந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் மேயர் தினேஷ்குமார் நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்