அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி - கட்டங்குடி சாலையில் தனியார் பஞ்சாலை மில் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பஞ்சாலையின் பின்பகுதியில் பழைய கழிவு பஞ்சுகள் மற்றும் பயன்பாடு இல்லாத எந்்திரங்களை குடோனில் வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பஞ்சுகள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பழைய கழிவு பஞ்சுகள் மற்றும் பயன்பாடு அற்று கிடந்த பழைய எந்திரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தாலுகா போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.