சிவகிரி அருகே தேங்காய் நார் கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

சிவகிரி அருகே தேங்காய் நார் கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது.

Update: 2022-06-03 20:20 GMT

சிவகிரி

சிவகிரி அருகே தேங்காய் நார் கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது.

தொழிற்சாலையில் தீப்பிடித்தது

சிவகிரி வி.கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). இவர் சிவகிரி அருகே உள்ள பொராசமேட்டுபுதூரில் தேங்காய் நார் மற்றும் கயிறு திரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். 60-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இங்கு வேலை பார்க்கிறார்கள். இவா்களில் சிலர் தொழிற்சாலையின் அருகிலேயே தங்கியுள்ளார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தேங்காய் நார் தொழிற்சாலையில் இருந்து புகை வந்தது. சில நிமிடங்களில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

போராடி தீயணைப்பு

தீப்பிடித்து எரிவதை அருகே தங்கியிருந்த தொழிலாளர்கள் பார்த்து, உடனே செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தார்கள். அவர் கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க முயன்றார்கள். விற்பனைக்கு தயார்நிலையில் இருந்த கயிறுகள், நார்களில் தீப்பற்றி விட்டதால் நீண்ட நேரம் தீ எரிந்தது. பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தார்கள்.

விசாரணை

இந்த தீவிபத்தில் தொழிற்சாைலக்குள் இருந்த 20-க்கும் மேற்பட்ட கயிறு திரிக்கும் எந்திரங்கள், 4 கயிறு சுற்றும் எந்திரங்கள், மின் உபகரணங்கள், விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கயிறுகள் என ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தொழிற்சாலைக்குள் தீ எப்படி பற்றியது? என்று கொடுமுடி தீயணைப்பு நிலைய அதிகாரியும், சிவகிரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்