2 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
2 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அடஞ்சவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது60). இவருடைய தங்கை சோமசுந்தரம் மனைவி சித்திரவள்ளி (50). இவர்கள் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சித்திரவள்ளி குடும்பத்தினர் வசிக்கும் கூரைவீடு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த சித்திரவள்ளி குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது அருகில் இருந்த அவருடைய அண்ணன் சுப்பிரமணியன் வீட்டின் பின்புறமும் ஒரு பகுதி எரிந்துக்கொண்டு இருந்தது. இதனைக்கண்ட இருவருடைய குடும்பத்தினரும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை இதனையடுத்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அங்குவந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். ஆனாலும் சித்திரவள்ளி வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி பொருட்கள் நாசமானது. அவருடைய அண்ணன் சுப்பிரமணியன் வீடு பாதி எரிந்து நாசமானது. இதுகுறித்து சித்திரவள்ளி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.