பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
பல்லடம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பல்லடம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி அருகே பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மகன் பிரபு (வயது 38) என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக அந்தபகுதியில் குடோன் வைத்துள்ளார். இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென பரவி அனைத்து பொருட்களிலும் பிடித்து கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கரும்புகை குடோனில் இருந்து பல அடி உயரத்திற்கு தெரிந்தது.
பல லட்சம் சேதம்
இந்த தீ விபத்தால் குடோன் கட்டிடம், எந்திரங்கள், வேன் மற்றும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் என சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்திருக்கலாம் என தெரிகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் சுமார் 5 தண்ணீர் லாரிகள் துணையோடு தீயை போராடி அனணத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எதனால் ஏற்பட்டது? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.