தம்பதி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி

Update: 2023-03-29 17:18 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜனதா நிர்வாகி சொத்தை அபகரித்ததாக புகார் தெரிவித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை ஒரு பெண் உள்பட 3 பேர் மனு கொடுக்க வந்தனர். திடீரென்று தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினார்கள்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தாராபுரத்தை சேர்ந்த சிவபாலமுருகன் (வயது 41) என்பதும் அவருடைய மனைவி சித்ரா (37) என்பதும், தாராபுரம் ஆச்சியூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாசிலாமணி (27) என்பதும் தெரியவந்தது.

ரூ.5 கோடி நிலம்

சிவபாலமுருகன், சித்ரா ஆகியோர் கூறும்போது, "வீடு கட்டுவதற்கும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் தாராபுரத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகியான ராஜாவிடம் ரூ.24 லட்சம் வட்டிக்கு வாங்கியதாகவும், வட்டி கட்ட முடியாததால் வங்கியில் கடன் வாங்கிக்கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி நிலத்துக்கான ஆவணங்களை பெற்று மோசடி செய்து விட்டார். இதுகுறித்து கேட்டால் மிரட்டுகிறார். சொத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்" என்றனர்.

மாற்றுத்திறனாளி மாசிலாமணி கூறும்போது, "ராஜாவிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு வாங்கினேன். வட்டி அதிகமாக இருந்ததால் வங்கியில் கடன் வாங்கிக்கொடுப்பதாக கூறி ரூ.75 லட்சம் மதிப்பிலான ஆவணங்களை ஏமாற்றி பெற்று அபகரித்து விட்டார். அதை மீட்டுக்கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

கலெக்டர் விசாரணை

பின்னர் 3 பேரையும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் போலீசார் அழைத்துச்சென்றனர். அவர்களிடம் கலெக்டர் விசாரணை நடத்தி, இதுகுறித்து மேல் நடவடிக்கைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்