பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு வெடித்து யானையை விரட்டியபோது கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது-வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு வெடித்து யானையை விரட்டியபோது கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. இதனால் வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானையை விரட்டும் பணி
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி கிராமத்துக்குள் நேற்று மாலை காட்டு யானை ஒன்று புகுந்தது. இந்த யானை சிவராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. அப்போது அங்கிருந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் பட்டாசுகளை கொளுத்தி யானை மீது வீசினர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து யானை அங்கிருந்து அருகே உள்ள புதுகரம்பு கிராமத்துக்குள் புகுந்தது. கரும்பு தோட்டத்தில் பற்றிய தீயை வனத்துறையினர், கிராம மக்கள் அணைக்க முடியாமல் தவித்தனர். இந்த தீ விபத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமாகின.
போராட்டம்
இதனால் கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். மேலும் அவர்கள் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக கூறி, அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் யானையை விரட்டும் பணிக்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். தீயில் கருகிய கரும்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிய நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.