பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

Update: 2023-01-14 17:29 GMT


திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர் காலேஜ் ரோடு திரு.வி.க.நகரில் கார்த்திகேயன் (வயது 42) என்பவர் உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தி நிறுவனம் வைத்துள்ளார். கட்டிடத்தின் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை முதல் பனியன் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் பனியன் நிறுவனத்தை மூடிவிட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் பனியன் நிறுவனத்தின் முதல்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை கவனித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தின் முதல் தளத்தில் அயர்னிங், பேக்கிங் பிரிவு செயல்படுகிறது. இதனால் ஆடைகளை அயர்னிங் செய்து அட்டைப்பெட்டிகளில் அடைத்து வைத்திருந்தனர்.

பல லட்சம் ஆடைகள் நாசம்

இந்த ஆடைகளில் பற்றிய தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

--------

மேலும் செய்திகள்