திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற இளம்பெண்
குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளான திங்கட்கிழமை தோறும், கலெக்டர் அலுவலக நுழைவுவாசலில் போலீசார் நின்று, மனு கொடுக்க வரும் அனைவரையும் சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிப்பது வழக்கம். மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர், நுழைவுவாசல் அருகே வந்ததும் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த பைக்குள் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதற்குள் அங்கிருந்த போலீசார் பாட்டிலை பறிமுதல் செய்து தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். தண்ணீரை கொண்டு வந்து அந்த பெண்ணின் மீது போலீசார் ஊற்றினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை இல்லை
தகவல் அறிந்ததும் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டை சேர்ந்த சவுந்தர்யா (வயது 19) என்பதும், உடன் அவருடைய தாயார் மஞ்சுளாவும் வந்தது தெரியவந்தது. சவுந்தர்யாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உறவினரான கோவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர் (40) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. மனோகரன், தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மஞ்சுளா தட்டிக்கேட்டபோது அவரையும் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து தாய், மகள் இருவரும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களாக புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வந்த நிலையில், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்காததால் மனஉளைச்சல் ஏற்பட்டு தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.