ஓசூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ-ரூ.25 லட்சம் மதிப்பிலான அரவை எந்திரம் சேதம்

Update: 2022-09-25 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான அரவை எந்திரம் சேதமானது.

மாநகராட்சி குப்பை கிடங்கு

ஓசூர் ஆனந்த் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, மாநகராட்சியின் 45 வார்டுகளிலும் சேமிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கப்படுகிறது. பின்னர் மக்காத குப்பைகள் அரவை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் தார்சாலை அமைக்க பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக குப்பை கிடங்கில் ரூ.25 லட்சம் மதிப்பிலான அரவை எந்திரம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எந்திரம் சேதம்

இந்த தீ விபத்தில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் அளவிலான மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலும் எரிந்து கருகியது. மேலும் அங்கிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள அரவை எந்திரமும் தீயில் எரிந்து சேதமானது. பிளாஸ்டிக் கழிவுகளில் பற்றிய தீயால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஓசூர் சிப்காட் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்