குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

Update: 2022-09-05 17:41 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு மனு கொடுக்க வந்தார். அவர் தீக்குளிப்பதற்காக ஏற்கனவே உடலில் மண்எண்ணெய் ஊற்றி வந்தது தெரியவந்தது. உடனே அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை நிறுத்தி குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து அவர் மீது ஊற்றினார்கள்.

விசாரணையில், அவர் திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த ஆயிஷா (வயது 30) என்பது தெரியவந்தது. அவர் அளித்த மனுவில், 'எனக்கும், சங்கர் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. 2 வயதில் குழந்தை உள்ளது. தற்போது 6 மாத கர்ப்பிணியாக நான் உள்ளேன். இந்தநிலையில் எனது கணவர் என்னையும், குழந்தையையும் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வசிக்கிறார். இருவரும் சேர்ந்து என்னை மிரட்டுகிறார்கள். அந்த பெண்ணை விட்டுவிட்டு, எனது கணவர் என்னுடன் சேர்ந்து வாழ உதவ வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்