பரமத்திவேலூரில் பழக்கடையில் திடீர் தீ
பரமத்திவேலூரில் பழக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகில் சாலையின் இடதுபுறத்தில் வரிசையாக பழக்கடைகள் உள்ளன. இவை தென்னை கீற்றுகளால் அமைக்கப்பட்டவை ஆகும். அங்கு பரமத்திவேலூர் கந்தன்நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி புவனேஷ்வரி பழக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் புவனேஷ்வரி உள்பட அனைவரும் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்தநிலையில் நள்ளிரவு காற்றின் வேகத்தில் பழக்கடையின் மேலே சென்ற மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து சென்று புவனேஷ்வரி பழக்கடையின் மீது விழுந்தது. இதன் காரணமாக அவரது கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற கடைகளுக்கு பரவாத வண்ணம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் புவனேஷ்வரி பழக்கடை மற்றும் அதில் இருந்த பழங்கள், பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.