ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
போலீஸ் சூப்பிரண்டின் திடீர் சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல்படை வீரர் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
போலீஸ் சூப்பிரண்டின் திடீர் சோதனையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல்படை வீரர் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
திடீர் சோதனை
வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களைத் தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் பலத்த காயம் மற்றும் உயிரிழக்கின்றனர்.
இதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அவர் உத்தரவிட்டார்.
இந்த வாகன சோதனை பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் சத்துவாச்சாரி போலீசார் ஈடுபட்டனர்.
ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் மடக்கி உடனுக்குடன் அபராதம் விதித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் ஊர்க்காவல் படை பிரிவை சேர்ந்த ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது-
200 பேருக்கு...
அந்த பகுதி முழுவதும் பேரி கார்டுகளை அடுக்கி வைத்து இருசக்கர வாகனங்களில் சென்ற அனைவரையும் பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பார்த்த சிலர் திரும்பி சென்றனர்.
கலெக்டர் அலுவலகம் அருகே மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 200 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அதேவேளையில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பணியிடை நீக்கம்
ஹெல்மெட் அணிவதில் போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே இருசக்கர வாகனத்தில் அவர்கள் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.
அவ்வாறு அணியாமல் செல்லும் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமின்றி அவர்களுக்கு அதிக தொகை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.