ஆண்டிப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 வியாபாரிகளுக்கு அபராதம்
ஆண்டிப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டனர். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர்ஜோதிநாதன், ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, க.விலக்கு, ராஜதானி, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீண்டும் இதுபோன்று புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதேபோல் கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கூடலூர் கூலிக்காரன் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடைக்காரர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.