கடைகள்-வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்-கலெக்டர் எச்சரிக்கை

கடைகள்-வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-04 19:07 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழல் ஆகியவைகளை பின்பற்றிட நம்ம ஊரு சூப்பரு என்ற பிரசார இயக்கம் கடந்த 1-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த பிரசார இயக்கம் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. பிரசார இயக்கத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், நம்ம ஊரு சூப்பரு பிரசார முனைப்பு இயக்கத்தினை அனைத்து கிராமங்களிலும் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தி கிராமங்கள் தோறும் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொண்டு சுத்தம் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். அதன்படி, கிராம ஊராட்சிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றை பொதுமக்களோடு கிராம துப்புரவு பணியாளர்கள் ஒருங்கிணைந்து அரசு பணியாளர்களும் தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை அனைத்து துறைகளின் அலுவலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியினை (பிளாஸ்டிக் பைகள்) பயன்படுத்தினால் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கிராமங்களில் உள்ள தனிநபர் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் செப்டிக் டேங்க் கழிவுகளை நீர்நிலைகளில் மற்றும் பொது இடங்களில் வெளியேற்றப்படும் நிலையினை தடுத்திடும் பொருட்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் மலக்கசடு மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு மீறி செயல்படும் லாரி உரிமையாளர்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும், என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்