தர்மபுரி பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு; வாகன உரிமையாளர்களுக்கு அபராதம்

Update: 2022-12-15 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறு

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்திற்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பஸ் போக்குவரத்து மற்றும் பயணிகள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் டீக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பஸ் நிலையத்திற்கு பயணிகளை வாகனங்களில் அழைத்து வருவோர் மற்றும் இங்கு உள்ள கடைகளுக்கு வரும் பலர் பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக மொபடி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் பல நேரங்களில் பஸ்களை அவற்றிற்குரிய பிளாட்பாரத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

அபராதம்

இந்த நிலையில் தர்மபுரி பஸ் நிலையத்தில் டவுன் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மொபட், மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இனிமேல் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். 

மேலும் செய்திகள்