விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி அதிகாரி தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-20 15:32 GMT



விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் 2022-23-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 12 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீத மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

சுயதொழில்கள்

இத்திட்டத்தில் பயன்பெற 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும், கணினித்திறன் பெற்றவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர் ஆவார்.

வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோரது நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாகவும், தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின்கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவை, திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக்கூடாது.

ஆவணங்கள்

இதற்கு தேவையான ஆவணங்களான 10 மற்றம் 12-ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணங்களுடன் வேளாண்மைத்துறை அக்ரிஸ்நெட் இணையதளத்தில் 30.9.2022-க்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

மேலும் தங்களின் விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குனர், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்