ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைக்க நிதி உதவி; கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் மற்றும் நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் மற்றும் நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதியுதவி
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பொருளாதார மேம்பாட்டு தொடர்பாக ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனங்கள் அமைத்திடவும், நவீன சலவையகங்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது. நவீன முறை சலவையகங்கள் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பம்
நவீன சலவையகங்கள் அமைத்திட அந்த தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். அதே போல் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனம் அமைத்திட தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள மேற்கண்ட வகுப்பினரை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவினர் நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்கக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.