சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிதிஉதவி
தஞ்சையில் இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் குடும்பத்தினருக்கு சக போலீசார் திரட்டிய ரூ.7 லட்சம் நிதி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மூலம் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் கடந்த 1993-ம் ஆண்டு போலீஸ்துறையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். பல்வேறு பதவி உயர்வுகளை பெற்று தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக முருகேசன் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக முருகேசன் இறந்தார். முருகேசன் பணியில் சேர்ந்த அதே ஆண்டில் அவருடன் பணியில் சேர்ந்த சக போலீசார் ஒன்று சேர்ந்து ரூ.7 லட்சத்து 6 ஆயிரம் நிதி திரட்டினர்.
ரூ.7 லட்சம் நிதிஉதவி
இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, முருகேசன் குடும்பத்தினரிடம் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்தை வழங்கி ஆறுதல் கூறினார். இதுகுறித்து நிதிஉதவி அளித்த போலீசார் கூறும்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை போலீஸ்காரராக 1993-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 பேர் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகிறோம். அவர்கள் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் என வாட்ஸ்அப் குழு மூலம், கடந்த 2019-ம் ஆண்டு முதல், இறந்த 50 போலீஸ்காரர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.2 கோடியே 86 லட்சத்தை வழங்கி உள்ளோம் என்றனர்.