67 முன்னாள் சிறைவாசிகளுக்கு ரூ.33½ லட்சம் நிதி உதவி

வேலூர் சரகத்தில் உள்ள ஜெயில்களில் இருந்து விடுதலையான 67 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.33½ லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-05-06 17:48 GMT

வேலூர் சரகத்தில் உள்ள ஜெயில்களில் இருந்து விடுதலையான 67 முன்னாள் சிறைவாசிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.33½ லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுயதொழில் தொடங்க நிதிஉதவி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலமாக ஜெயிலில் தண்டனை அனுபவித்த நன்னடத்தை கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் முன்விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறாக விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் சார்பில் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் மூலம் சுயதொழில்கள் தொடங்க ரூ.3 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் சிறைவாசிகள் தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மீதமுள்ள முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. இதில், வேலூர் ஜெயில் சரகத்தில் இருந்து முன்விடுதலையான 67 பேருக்கும் நிதிஉதவி வழங்கப்பட்டன.

67 முன்னாள் சிறைவாசிகள்...

இதுகுறித்து வேலூர் சரக ஜெயில் உயர்அதிகாரிகள் கூறுகையில், வேலூர் ஜெயில் சரகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இங்கு 2 மத்திய ஆண்கள் ஜெயில்கள், பெண்கள் ஜெயில், மாவட்ட, கிளை ஜெயில்களில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு 67 நன்னடத்தை கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் நல்வாழ்விற்கும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் சமூகத்தில் நேர்மையாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில் சுயதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.33 லட்சத்து 50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்