அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

Update: 2023-05-08 20:46 GMT

சென்னை,

"உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற கொள்கையை கொண்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மே தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் அ.தி.மு.க.வின் தொழில் பிரிவான அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கி வந்தார். ஜெயலலிதாவின் இந்த உயர்ந்த திட்டத்தின் பலனாக எண்ணற்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் இந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த நிலையில், உள்கட்சி பிரச்சினையால் கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இந்தநிலையில், கடந்த ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்கும் சேர்த்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

314 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டையும், இந்த ஆண்டையும் சேர்த்து, கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 கோடியே 14 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.

17-ந் தேதி வழங்கப்படுகிறது

அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இவர்களுக்கான நிதியுதவி வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்