நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.;

Update:2024-09-13 18:01 IST

சென்னை,

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பண் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேர்ல் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு திமுக எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் மட்டுமின்றி ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.

நாளை(14.09.2024) சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்