திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்; 2-வது தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான 2-வது தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வருகிற மார்ச் 26-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை ரத்துசெய்து, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், திரைப்பட கவுன்சில் உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன், "தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.வெங்கட்ராமனை தன்னிச்சையாக நியமித்தது தவறு" என்று வாதிட்டார்.
அப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன், "செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட பிறகே தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டார்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான இரண்டாவது தேர்தல் அலுவலராக ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமனுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும், தேர்தல் முடிவடைந்த பின்னர் அதுதொடர்பான அறிக்கையை ஏப்ரல் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தேர்தலுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையை அணுகவும் நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.