திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலனின் மகள் தற்கொலை

திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலனின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-09 21:55 GMT

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கபிலன். தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரான இவர், பல்வேறு படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார்.

இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு தூரிகை (வயது 28) என்ற மகள் இருந்தார். இவர், எம்.பி.ஏ. படித்து முடித்து விட்டு 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற தூரிகை திடீரென தூக்குப்போட்டு கொண்டார். மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷா அலறினார். உடனடியாக தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தூரிகை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணத்துக்கு வற்புறுத்தல்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார், தற்கொலை செய்த தூரிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

தூரிகையை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்