படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளுடன் சினிமா துறை ஊழியர் கைது
படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டை பயன்படுத்தி தியேட்டரில் டிக்கெட் எடுக்க முயன்ற சினிமா துறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
போலி ரூபாய் நோட்டு
சென்னை வடபழனியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வாலிபர் ஒருவர், 500 ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிய தியேட்டர் ஊழியர், அது போலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து வைத்துக்கொண்டு, இதுபற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் போலி ரூபாய் நோட்டை கொடுத்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
சினிமா துறை ஊழியர்
விசாரணையில் அவர், தூத்துக்குடியை சேர்ந்த அய்யப்பராஜ் (வயது 23) என்பதும், சினிமா துறையில் வேலை செய்து வருவதும், இதற்காக சென்னை விருகம்பாக்கம், அருணாசலம் சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரிந்தது. அவரிடம் இருந்த போலி ரூபாய் நோட்டுகள், சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. சினிமா படப்பிடிப்புக்காக ஒரே சீரியல் எண்ணில் போலியாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, "சினிமா படப்பிடிப்பு பயன்பாட்டுக்கு மட்டும்" எனவும் அந்த ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டு இருந்தது.
போலீஸ் விசாரணை
சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்துவதற்காக சினிமா துறையை சேர்ந்த ஒருவரிடம் கொடுப்பதற்காக ரூ.7 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500 ரூபாய் போலி நோட்டுகளை நண்பர் ஒருவர் கொடுத்ததாகவும், பார்க்க அச்சு அசலாக உண்மையான ரூபாய் நோட்டுகள் போல் இருப்பதால் அதில் ரூ.6 ஆயிரத்தை தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் வாடகையாக கொடுத்து உள்ளார்.
மீதம் உள்ள பணத்தில் ஒரு போலி 500 ரூபாயை கொடுத்து தியேட்டரில் டிக்கெட் வாங்க முயன்றபோது சிக்கிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அய்யப்பராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலியான ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர், இதுபோல் வேறு எங்காவது இந்த போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.