அரசுப் பள்ளிகளில் 'சிறார் திரைப்பட விழா' - பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்களை திரையிடுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை,
மாணவர்கள் தொழில்முறை கலைஞர்களாக உருவாகும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை 'சிறார் திரைப்பட விழா' என்ற பெயரில் தமிழக பள்ளிக்கல்வித் துறை வகுத்துள்ளது.
இதன்படி அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறார் திரைப்பட விழா தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-
"* அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிட வேண்டும்.
* இந்த திரைப்படத்திற்காக ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே திரைப்படங்களை திரையிட வேண்டும்.
* படத்தை திரையிடுவதற்கு முன்பும், திரையிடப்பட்டதற்கு பின்பும் அதுதொடர்பாக மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.
* எந்த படங்களை திரையிடுவது என்பது குறித்த விவரங்களை கல்வித்துறை அனுப்பும்.
* திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதி தரவேண்டியது கட்டாயம்.
* பள்ளிகள் சிறப்பான இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.
* இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.