கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும்
அரசு அலுவலகங்களில் கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு செயலாளர் செல்வராஜ் அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு செயலாளர் செல்வராஜ் பேசியதாவது:-
தமிழில் பராமரிக்க வேண்டும்
மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனி ஆற்றல் பெற்றது. உலக அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்படும் தமிழ் நமது ஆட்சிமொழியாக திகழ்கிறது.
அரசு அலுவலகங்களில் கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும். அரசு கடிதங்களை தமிழில் பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நினைவு மண்டபம்
இதனைத் தொடர்ந்து அவர் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரமராஜசிங்கன் கல்லறை அமைந்துள்ள முத்துமண்டபத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நினைவு மண்டபத்தை நாள்தோறும் தூய்மையாக பராமரிக்கவும், சுற்றுலா பயணிகள் பார்வையிட வரும் போது மன்னர் குறித்த விவரங்களை எடுத்துரைக்கவும் காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் நாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.