காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணல்குவாரிக்கு அனுமதி வழங்கப்படாது என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுங்கள் - தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கவில்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்று அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-05-18 19:27 GMT


காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கவில்லை என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்று அரசு தரப்புக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

25 இடங்களில் மணல் குவாரி

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் அமைந்து உள்ள கல்லணை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால்சோழனால் கட்டப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்பட்டு, தற்போது வரை அனைவரும் வியந்து பார்க்கும் அணையாக கல்லணை உள்ளது.

ஆனால் கல்லணை அருகில் 25 இடங்களில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மணல் குவாரிகளின் செயல்பாடுகள் உள்ளன.

இந்தசூழ்நிலையில் கொள்ளிடம் படுகையில் 25 இடங்களில் குவாரிகள் தொடங்கப்பட்டால் மிகவும் பழமையான கல்லணை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் டெல்டா பகுதி விவசாயிகளும் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள். ஏற்கனவே கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்ததால் தான் கல்லணை பாலம் சேதம் அடைந்தது.

அனுமதிக்கக்கூடாது

எனவே கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே தஞ்சாவூர் கொள்ளிடம் பகுதியில் 25 இடங்களில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும். பழமையான கல்லணையை பாதுகாக்கும் வகையில் கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசுக்கு உத்தரவு

பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன், காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு ஆகியவற்றின் படுகைகளில் 25 இடங்களில் மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கும் வகையில் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எதுவும் அமைக்கப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றினை சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளும் தொடக்கநிலையில்தான் உள்ளது.

இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் கொள்ளிடம் ஆற்றில் எந்த மணல் குவாரியும் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்