கச்சிராயப்பாளையம் அருகே மர்ம விலங்கு கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன

கச்சிராயப்பாளையம் அருகே மர்மவிலங்கு கடித்து குதறியதில் 15 ஆடுகள் செத்தன.;

Update:2022-06-15 20:07 IST

கச்சிராயப்பாளையம், 

செத்துக்கிடந்த ஆடுகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி, விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து 15 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று  மாலை செல்வமணி வழக்கம்போல் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆடுகளை ஓட்டி வந்து, கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, 15 ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் செத்துக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வமணி இதுபற்றி கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மர்மவிலங்கு நடமாட்டம்

அதன்பேரில் கால்நடைத்துறை டாக்டர் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து, செத்துக்கிடந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்ததோடு, அதே இடத்தில் புதைத்தனர். இதுபற்றி அக்கிராம மக்கள் கூறுகையில், நள்ளிரவில் கல்வராயன்மலை வனப்பகுதியில் இருந்து வந்த மர்மவிலங்கு ஆடுகளை கடித்து குதறியதில், 15 ஆடுகளும் செத்திருக்கலாம். ஆகவே மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்