குறைந்த அளவில் இயக்கப்படும் பஸ்கள்

சிங்கம்புணரி பகுதியில் குறைந்த அளவில் இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

Update: 2022-09-21 18:45 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் குறைந்த அளவில் இயக்கப்படும் பஸ்களால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

பஸ் வசதி இல்லை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து சிங்கம்புணரி பகுதிக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்புக்காக அரசு பள்ளிகளுக்கு தினந் தோறும் மாணவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கின்றனர். சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் சிங்கம்புணரி பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அதேபோல கூலி தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு வேலை காரணமாக பொதுமக்களும் சிங்கம்புணரிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் இவ்வாறு வரும் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

100 பேர் பயணம்

குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. சுமார் 50 பேர் பயணிக்க கூடிய பஸ்சில் 100-க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். மேலும் மாணவிகள் பஸ்களில் ஏற முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து வேறு பஸ்சில் ஏறி இரவுதான் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவிகள் அச்சத்துடன் வீட்டுக்கு செல்கின்றனர்.

சிங்கம்புணரியில் இருந்து அரசினம்பட்டி வழியாக சூரக்குடி மார்க்கம் திருப்பத்தூர் செல்லும் பஸ், நாட்டார்மங்கலம் வழியாக கொடுக்கம்பட்டி, அட்டப்பட்டி வழியாக செல்லும் மேலூர் பஸ், பருவப்பட்டி வழியாக, கண்ணமங்கலம் பட்டி வழியாக, சாத்தினிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ், சிங்கம்புணரியில் இருந்து பிரான்மலை மற்றும் மலைப்பகுதியான மேல வண்ணாரிருப்பு, கட்டுக்குடிப்பட்டி, எஸ்.புதூர் செல்லும் பஸ் என குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ் குறைந்த அளவில்தான் இயக்கப்படுகிறது.

கோரிக்கை

எனவே. மேற்கண்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளின் நலன்கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் எனவும், மேலும் காலை, மாலை நேரங்களில் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்