56 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
தேனி மாவட்டத்தில் 56 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வைரஸ் காய்ச்சல்
தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேனி மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
56 இடங்களில் முகாம்
தேனி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழக அரசு உத்தரவுப்படி காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார். மாவட்டத்தில் 8 நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் தலா 3 இடங்கள் வீதம் 24 இடங்களில் மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
அதுபோல், குழந்தைகளுக்கான நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் வட்டாரத்துக்கு 2 வீதம் மொத்தம் 16 வாகனங்கள் உள்ளன. இந்த குழுவினர் தலா 2 இடங்கள் வீதம் 32 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்த உள்ளனர். மொத்தம் மாவட்டத்தில் 56 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது.
அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் மக்களின் குடியிருப்பு விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அத்தகைய இடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த காய்ச்சல் கண்டறியும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். முகாம் நடக்கும் இடங்களில் பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் பெறலாம். காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.